அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களுக்கு பிரியாவிடை மற்றும் ஓய்வூதிய வழங்கும் நிகழ்வு
தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற ஆதீனக் கேட்போர் கூட்டத்தில் தனது 67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், தனது திருச்சபை ஊழியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிகழ்வில், பல ஆண்டுகளாக குருமார்களுக்காக நடைமுறையில் இல்லாதிருந்த ஓய்வூதியத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அவரது நீண்டகால அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் ஊழியர் நல நிதிக்கான காசோலையும் அதே நாளில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆதீன செயலாளர், ஆதீன பொருளாளர், அருட்பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான விசுவாசமிக்க சேவை நினைவுகூரப்பட்டதுடன், அவரது திருச்சபைப் பணிக்காக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாழ்த்துமடல் வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
இறைவனின் திராட்சைத்தோட்டத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த அருட்பணி ஏ.கே. செல்வநாயகம் அவர்களின் சேவையை யாழ் ஆதீனம் நன்றியுடன் நினைவுகூருவதுடன், அவரது ஓய்வுக் கால வாழ்வு இறைவனின் ஆசீர்வாதமும் சமாதானமும் நிறைந்ததாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துகிறது




