மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படை வசதிகள் குறைந்த வட்டிப்போட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள ஜெபாலயத்திற்கு தென்னிந்திய திருச்சபை – யாழ்ப்பாண ஆதீனப் பேராயர். கலாநிதி V. பத்மதயாளன் அவர்கள் 13.09.2026 அன்று விஜயம் செய்து, தூய நற்கருணை வழிபாட்டை நடத்தினார்.
1953ஆம் ஆண்டு ஆச்சிரமத் தொண்டராகிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் அர்ப்பணிப்பான பணியின் மூலம் இப்பகுதியில் வழிபாட்டு மனை மற்றும் சிறிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அவை அழிவடைந்தன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஆச்சிரம அன்பர் ஒருவரின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பின் மூலம் மீண்டும் வழிபாட்டு மனை அமைக்கப்பட்டு, அது “ஜெபாலயம்” என அழைக்கப்பட்டு வருகிறது. வயல் நிலங்களால் சூழப்பட்டுள்ள இவ்விடத்தில் அமைந்துள்ள ஜெபாலயம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கும் வழிபாட்டு வாழ்விற்கும் சாட்சியாக விளங்குகிறது.
பேராயர் அவர்களின் விஜயத்தின் போது நடைபெற்ற தூய நற்கருணை வழிபாட்டில் அருட்பணி ஜெரோம் அவர்களும் உடனிருந்தார். வழிபாட்டின் போது பேராயர் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அருளுரை வழங்கி, இப்பகுதியில் முன்னோடியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் தியாகப் பணியை நினைவுகூர்ந்தார்.
1953ஆம் ஆண்டு தொடங்கிய இந்த இறைப்பணியின் தொடர்ச்சியாக இன்று ஜெபாலயத்தில் வழிபாடு நடைபெறுவது இறைவனின் வழிநடத்தலுக்கும் கிருபைக்கும் சாட்சியாகும். இப்பணிக்காகவும், முன்னோடியாக உழைத்த சின்னண்ணன் அவர்களின் தியாகத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இறைவனுக்கே புகழ் உண்டாகுக!


