+94 21 225 0826
வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் திருப்பலி வழிபாடு

வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் திருப்பலி வழிபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படை வசதிகள் குறைந்த வட்டிப்போட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள ஜெபாலயத்திற்கு தென்னிந்திய திருச்சபை – யாழ்ப்பாண ஆதீனப் பேராயர். கலாநிதி V. பத்மதயாளன் அவர்கள் 13.09.2026 அன்று விஜயம் செய்து, தூய நற்கருணை வழிபாட்டை நடத்தினார்.
1953ஆம் ஆண்டு ஆச்சிரமத் தொண்டராகிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் அர்ப்பணிப்பான பணியின் மூலம் இப்பகுதியில் வழிபாட்டு மனை மற்றும் சிறிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அவை அழிவடைந்தன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஆச்சிரம அன்பர் ஒருவரின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பின் மூலம் மீண்டும் வழிபாட்டு மனை அமைக்கப்பட்டு, அது “ஜெபாலயம்” என அழைக்கப்பட்டு வருகிறது. வயல் நிலங்களால் சூழப்பட்டுள்ள இவ்விடத்தில் அமைந்துள்ள ஜெபாலயம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கும் வழிபாட்டு வாழ்விற்கும் சாட்சியாக விளங்குகிறது.
பேராயர் அவர்களின் விஜயத்தின் போது நடைபெற்ற தூய நற்கருணை வழிபாட்டில் அருட்பணி ஜெரோம் அவர்களும் உடனிருந்தார். வழிபாட்டின் போது பேராயர் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அருளுரை வழங்கி, இப்பகுதியில் முன்னோடியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சின்னண்ணன் (சேவக் ஜேசுசகாயம்) அவர்களின் தியாகப் பணியை நினைவுகூர்ந்தார்.
1953ஆம் ஆண்டு தொடங்கிய இந்த இறைப்பணியின் தொடர்ச்சியாக இன்று ஜெபாலயத்தில் வழிபாடு நடைபெறுவது இறைவனின் வழிநடத்தலுக்கும் கிருபைக்கும் சாட்சியாகும். இப்பணிக்காகவும், முன்னோடியாக உழைத்த சின்னண்ணன் அவர்களின் தியாகத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இறைவனுக்கே புகழ் உண்டாகுக!
மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்பு

தென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் கிழக்குப் பிராந்தியப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 13 செப்டம்பர் 2026 அன்று மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு தென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் பேராயர் பேரருட்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஆலயத்தின் பிரதிஷ்டை ஆராதனை பேராயர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றதுடன், திருவிருந்து ஆராதனையும் அருளுரையும் பேராயர் அவர்களால் நடத்தப்பட்டது.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் கிழக்குப் பிராந்தியத்தில் தென்னிந்திய திருச்சபையின் பணிகள் மீண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வேளையில், நிரந்தர ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கியமான விடயமாகும்.
இந்த புதிய ஆலயம் இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திருச்சபையின் ஆராதனை மற்றும் ஊழியப் பணிகளுக்கு வலுவான தளமாக அமையும் எனவும், இப்பகுதி மக்களின் ஆன்மிக வாழ்வுக்கும், விசுவாச வளர்ச்சிக்கும், சமூக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு

பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு

3, 4 மற்றும் 5 வயதுடைய சிறார்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “இயற்கை நண்பர்கள் கழகம்” நிகழ்வு, தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்படும் ‘கடவுளின் அன்பு’ திட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயற்கை முறையில் தாவரங்களை வளர்ப்பது, தாவரங்களுக்குத் தேவையான உரங்களை முறையாகப் பயன்படுத்துவது, அவற்றைப் பாதுகாத்து பராமரிப்பது மற்றும் நீர்ப்பற்றாக்குறை நிலவும் காலங்களிலும் தாவரங்களைச் சிறப்பாகப் பராமரித்து வளர்ப்பது தொடர்பான பயனுள்ள தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வின் வளவாளராக விவசாயத் திணைக்கள அதிகாரி திரு. A. ரெஜிதாஸ் கலந்து கொண்டு, தாவர வளர்ப்பு மற்றும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கும் முறைகள் தொடர்பில் நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், நிகழ்வில் பங்கேற்ற பெற்றோருக்கு பாக்கு மற்றும் மாதுளை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வீடுகளில் இயற்கைச் சூழலை மேம்படுத்துவதுடன், தாவர வளர்ப்பில் பெற்றோர்களையும் சிறார்களையும் ஊக்குவிக்கும் நோக்கமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மொத்தமாக 20 பெற்றோர்கள் பங்கேற்றனர். நிகழ்வை R. பிரமிளா மற்றும் M. கிருஷாலினி ஆகியோர் திட்டமிட்டு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.
பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வு

பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வு

பெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை முன்னிறுத்தி, பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக (Parents & Children Learning Club) நிகழ்வு நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை புதுக்குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.
தென் இந்திய திருச்சபை – யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தில் நடைபெற்று வரும் “கடவுளின் அன்பு” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், 55 சிறுவர்கள், 40 பெற்றோர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என மொத்தம் 114 பேர் கலந்துகொண்டனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொறுப்பான பெற்றோர்மையை ஊக்குவித்தல், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவான வழிகாட்டல்களை பெற்றோர்களுக்கு வழங்குதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.
இந்நிகழ்வின் வளவாளராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்தர் கலந்துகொண்டு, பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு, பெற்றோரின் பொறுப்புகள் மற்றும் சிறுவர்களின் வளர்ச்சி தொடர்பான பயனுள்ள தகவல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினார். அவரது சிறப்பான வழிகாட்டுதலுடன் நிகழ்வு பயனுள்ள முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, 11 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தங்களது கருத்துக்களையும் பங்களிப்பையும் வழங்கினர். அவர்களின் உற்சாகமான பங்கேற்பு நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.
சிறுவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களின் உடல், உளவியல், சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
சிறுவர் பாதுகாப்பு, பொறுப்பான பெற்றோர்மை மற்றும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புலேந்திரன் முன்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு

பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புலேந்திரன் முன்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு

பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, நாதன் திட்டக் கிராமத்தில் அமைந்துள்ள புலேந்திரன் முன்பள்ளியில் நேற்று காலை 11.00 மணியளவில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தின் “கடவுளின் அன்புத் திட்டம்” ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 48 சிறுவர்கள், 25 பெற்றோர் மற்றும் 19 பணியாளர்கள் என மொத்தம் 92 பேர் கலந்துகொண்டனர்.
பிள்ளைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளை கண்டாவளை பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் இளைஞர் கழக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. A. ஜெயலன் நடத்தினார். இதன்போது சிறுவர்களை பாதுகாப்பது, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, அத்துடன் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் மற்றும் சமூகத்தின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயனுள்ள விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கிராம அபிவிருத்திச் சங்கமும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கின.
நிகழ்வின் நிறைவாக மதியம் 12.30 மணியளவில் பங்கேற்ற அனைத்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் சிறிய பரிசுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
சமூக மட்டத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சிறுவர்கள், பெற்றோர், பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளின் சிறப்பான பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.