+94 21 225 0826
தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் “கடவுளின் அன்பு” திட்டத்தின் சிறுவர்களும் பணியாளர்களும் இணைந்து ரோயல் விளையாட்டு மைதானத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
குறித்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ள சிறுவர்களிடையே சமூகப் பொறுப்பு, ஒற்றுமை, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ரோயல் விளையாட்டு மைதானத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், பல்வேறு குப்பைகள் மற்றும் மரக்கிளைகள் காணப்பட்ட நிலையில், சிறுவர்களும் பணியாளர்களும் ஒன்றிணைந்து அவற்றை அகற்றி மைதானத்தை முழுமையாகச் சுத்தப்படுத்தினர். இதன் மூலம் மைதானம் மேலும் அழகானதும் பயன்படுத்துவதற்கு ஏற்றதுமான சூழலாக மாற்றப்பட்டது.
சிறுவர்களின் சமூகப் பங்களிப்பையும் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய குறித்த விளையாட்டுக் கழகத்தின் தலைவர், அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு கல்வியுடன் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்ப்பதற்கான இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.